அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடனான வெள்ளை மாளிகை சந்திப்பின்போது, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்களுக்கு எதிராக “இனப்படுகொலை” நடப்பதாகக் கூறும் ஒரு வீடியோவை திரையிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தென்னாப்பிரிக்க மக்கள் தொகையில் 7.3 சதவீதமே வெள்ளையர்கள் உள்ளனர். ஆனாலும் நாட்டின் பெரும்பான்மையான நிலங்கள் வெள்ளையர்களிடமே உள்ளன. கடந்த ஜனவரியில் காலனியாதிக்க ஆட்சியின் வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும், நில அபகரிப்பு சட்டம் கொண்டு வரப் பட்டது.
வெள்ளையர்களுக்குச் சொந்தமான நிலங்கள் தன்னிச்சையாகப் பறிமுதல் செய்யச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை கத்தார் பொருளாதார மன்றத்தில் பேசிய எலான் மஸ்க்,தென்னாப்பிரிக்காவில் ஏன் நில சட்டங்கள் உள்ளன என்று கேள்வியெழுப்பினார். கடந்த 21 ஆம் தேதி, வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சந்தித்தார். இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
வழக்கமான சந்திப்பாக இல்லாமல், அமெரிக்க அதிபர் கூறிய குற்றச்சாட்டால் பெரும் சர்ச்சைக்குரிய சந்திப்பாக மாறியது. நல்லவிதமாகச் சென்று கொண்டிருந்த சந்திப்பினிடையே, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக “இனப்படுகொலை” நடப்பதாகவும், அமெரிக்கர்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக்காகத் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறுவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். இது தென்னாப்பிரிக்க அரசை நேரடியாக விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தது.
தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக, வெள்ளை மாளிகையின் ஊழியர்களை அழைத்து அறை விளக்குகளின் ஒளியைக் குறைக்கச் சொல்லிய ட்ரம்ப் ,பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஒரு வீடியோவை பெரிய திரையில் ஒளிபரப்பச் செய்தார். அந்த வீடியோ தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின விவசாயிகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றியதாகும்.
ஒரு வெள்ளையின விவசாயியைக் கொல்வது பற்றிய சர்ச்சைக்குரிய இனவெறி பாடலை தென்னாப்பிரிக்காவின் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளான ஜேக்கப் ஜுமா மற்றும் ஜூலியஸ் மாலேமா ஆகியோர் பாடுவதையும், வெள்ளை சிலுவைகளால் குறிக்கப்பட்ட ஆப்பிரிக்கர் கல்லறைகளைக் காட்டும் ட்ரோன் காட்சிகளையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
இதனையடுத்து, தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்த கொலைகள் பற்றிய செய்தித்தாள் கட்டுரைகளையும் காட்டிய ட்ரம்ப், “மரணம், மரணம், மரணம், பயங்கரமான மரணம்” என்று முணுமுணுத்தையும் உலகமே நேரலையில் பார்த்தது.
பிரிட்டோரியாவில் வெள்ளையர் இனப்படுகொலை நடப்பது குறித்து ராமபோசாவிடம் விளக்கமும் ட்ரம்ப் கேட்டார். தென்னாப்பிரிக்கா மீது குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்ட நிலையில், அதிர்ச்சிக்குள்ளான சிரில் ராமபோசா, ட்ரம்பின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார்.
தென்னாப்பிரிக்காவில் எல்லா இன மக்களும் வன்முறைகளால் பாதிக்கப்படுவதாகக் கூறிய சிரில் ராமபோசா எந்தக் குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைத்து வன்முறைகள் நடக்காததால், இதை “இனப்படுகொலை” என்று சொல்வது தவறு என்றும் சுட்டிக் காட்டினார்.
தான் கொடுத்த நியாயமான விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் மீது ஆத்திரமடைந்த சிரில் ராமபோசா, ஒருகட்டத்தில் ட்ரம்பிடம், தங்களுக்குப் பரிசளிக்க தன்னிடம் ஒரு விமானம் இருந்திருக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து, ட்ரம்பின் நீண்டகால ஆலோசகர் ஜேசன் மில்லர் இது இப்போது உலகளவில் பார்க்கப்படுவதாகவும், கோல்ட் ரேட்டிங் கிடைத்துள்ளதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
ட்ரம்பின் நடத்தையை வெட்கக்கேடானது மற்றும் திகிலூட்டுவது என்று விவரித்துள்ள தென்னாப்பிரிக்காவின் பழமையான மற்றும் மிகப்பெரிய சிவில் உரிமைகள் குழுவான NAACPயின் தலைவர் டெரிக் ஜான்சன், இனத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க ட்ரம்ப் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே காசாவில் இஸ்ரேல் இனப் படுகொலை செய்ததாகச் சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கை அமெரிக்கா கடுமையாக எதிர்த்துள்ளது.. தென்னாப்பிரிக்காவுக்கு 30 சதவீத வரி விதிக்கப் பட்டுள்ளது. ட்ரம்பின் தேசத்துக்கு முன்னுரிமை என்ற கொள்கையை விமர்சனம் செய்த பிரிட்டோரியாவின் தூதர் வெளியேற்றப் பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பின் மூலம், அமெரிக்காவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.