“ஒன்றிய அரசு” என்று கூறிய அரசு அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில், துறை சார்ந்த அலுவலர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். விவசாயிகளின் பல்வேறு குறைகளுக்கு அரசு அதிகாரிகள் பதிலளித்து வந்த நிலையில், பி.எம்.கிஷான் திட்டத்தில் ஆதார் எண் இணைப்பது குறித்துப் பேசியபோது ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மத்திய அரசை “ஒன்றிய அரசு” எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு பாஜக ஆதரவு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அவர்களைச் சமாதானம் செய்து அமர வைத்தனர். இதனால், குறைதீர் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.