சர்வதேச உயிர்ப்பண்மை தினத்தையொட்டி, இயற்கையோடு நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி என்ற தலைப்பில் சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தமிழ்நாடு உயிர் பன்மை வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, கேர் டிரஸ்ட் அமைப்பு உள்ளிட்டவை சார்பில் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலர், விலங்குகள் தாவரங்கள் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை குறித்து, கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கேர் டிரஸ்ட் அமைப்பின் தலைவர் ஜெயஸ்ரீ, இனிவரும் காலங்களில் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற பொறுப்பை ஏற்படுத்துவதே உயிர்ப்பண்மையின் சாராம்சம் எனத் தெரிவித்தார்.