கோடை விடுமுறையைப் பயனுள்ளதாகக் கழிக்கவும், தங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடற்பயிற்சி கூடங்களை ZEN Z KIDS நாடத் தொடங்கியுள்ளனர். கட்டு மஸ்தான உடலைப் பெற உடற்பயிற்சி கூடங்களை நாடும் ZEN Z KIDS குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
80 கிட்ஸ், 90 கிட்ஸ், 2K கிட்ஸ் என கேள்விப்பட்டிருப்போம். அது என்ன ZEN Z KIDS ? பெயரே புதியதாக இருக்கிறதே ? என்று எண்ணத் தோன்றலாம். இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளைஞர்களுக்கான பெயர் தான் இந்த ZEN Z KIDS. பெயருக்கு ஏற்றார் போலவே அவர்களின் செயல்பாடுகளும் சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.
90s கிட்சும், 2 K கிட்சும் கோடை விடுமுறை என்றாலே வெயிலாக இருந்தாலும் சரி கனமழை கொட்டித் தீர்த்தாலும் சரி விளையாடியேத் தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் இந்த ZEN Z KIDS சக நண்பர்களுடன் அமர்ந்து ஆன்லைன் கேம் விளையாடுவதிலும், இணையதளங்களில் வெளியாகும் புதுப்புது வெப்சீரிஸ்களையும் பார்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதோடு அண்மைக்காலமாக அவர்களின் பார்வை உடற்பயிற்சி கூடத்தின் பக்கமும் திரும்பியுள்ளது.
20வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவே உடற்பயிற்சி கூடத்தை நாடியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான உடற்பயிற்சி மையங்கள் ZEN Z KIDS-களால் நிரம்பி வழிகிறது. உடற்பயிற்சி மையத்திற்கு வரும் இளைஞர்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் முழுநேரமும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை எனவும், கோடை விடுமுறையைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவே உடற்பயிற்சி மையங்களை நாடியிருப்பதாகக் கூறுகின்றனர் இந்த ZEN Z KIDS.
இளம் வயதிலேயே மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பலர் பாதிப்படைந்து வரும் நிலையில், மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் உடற்பயிற்சி மையங்களை நாடியிருப்பது வரவேற்புக்குரியதே.