மேலூர் அருகே ஐந்து முத்தன் கண்மாயில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் கள்ளந்திரி ஊராட்சியில் உள்ள ஐந்து முத்தன் கண்மாயில் ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் காணிக்கையாக விடப்பட்டு மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான பாரம்பரிய மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கள்ளந்திரி, மேலூர், அழகர்கோவில், வல்லாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே கண்மாய் கரையில் காத்துக் கிடந்த நிலையில், கிராமப் பெரியவர்கள் வலை வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் பாரம்பரிய வலைகளை பயன்படுத்தி நாட்டுவகை மீன்களான கட்லா, கெளுத்தி, அயிரை, விரால், ரோகு உள்ளிட்ட மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர். மீன்பிடி திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கரையில் இருந்தபடி கண்டு ரசினத்தனர்.