பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதையுடன் நடத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டியது அவசியம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே நமது இலக்கு எனச் சூளுரைத்தார்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் முடியாதது என்று எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும், ஒவ்வொரு மாவட்டத்தையும், ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், சாதாரண மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மக்கள் எப்போது மாற்றத்தை உணர்கிறார்களோ அப்போதே அது ஒரு புரட்சியாக மாறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே, நிதி ஆயோக் கூட்டத்தின் தேநீர் இடைவேளையின்போது பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். கலகலப்பான இந்த உரையாடலின்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் உடனிருந்தார்.