தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கேரளா, பீகார், மேற்குவங்கம் உட்பட 5 மாநில முதலமைச்சர்கள் தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் உடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அனைவரும் தங்களின் ஒப்புதலை வழங்கியதாக தெரிவித்தார். மேலும் நக்சலைட்டுகளுக்கு எதிராக நடந்து வரும் பிரச்சாரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.