சென்னை, திருவான்மியூரில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் திருட முயன்ற கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர், திருவள்ளுவர் நகரில் SBI வங்கியின் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. அங்கு நுழைந்த சிலர், கருப்பு நிற அட்டையை வைத்து எந்திர கோளாறை ஏற்படுத்தினர்.
அப்போது வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட், பின் நம்பர் என விவரங்களை பதிவு செய்த பின்னரும் பணம் வராததால் இயந்திர கோளாறு என நினைத்துக் கொண்டு தனது ஏடிஎம் கார்டை எடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி தலைமை, திருவான்மியூர் கிளையின் தொழில்நுட்ப பிரிவினருக்குத் தகவல் அளித்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் கொள்ளை முயற்சி குறித்து போலீசாரிடம் புகாரளித்தனர்.
அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிட்ஜ் பான், ஸ்மித் யாதவ் ஆகியோரை கைது செய்தனர்.