இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாகப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்து பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
மேலும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதைப் பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வந்த நிலையில், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஈரான் பயணத்தின்போது, காஷ்மீர் விவகாரம், சிந்து நதி நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.