மேட்டூரில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 7 போலீசாருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சேலம் மாவட்டம் கருமலை கூடல் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் கொலை வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் கோகுல கண்ணன் என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளான கோகுல கண்ணன் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதனை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஒரு மாதத்தில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
இந்த இழப்பீட்டுத் தொகையில் தலா 2 லட்சம் ரூபாயை உதவி ஆய்வாளர் ஹரிகரன் மற்றும் கீர்த்தி வாசன் ஆகியோரிடம் இருந்தும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வேணுகோபால், சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்து தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மூன்று காவலர்களிடமிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும் வசூலிக்க ஆணையிட்டார்.
மேலும், அவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.