சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 36 பேர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் பிரபல தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இங்கே இயங்கிக் கொண்டிருந்த ராட்சத ராட்டினத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில் அதில் 36 பேர் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ராட்சத இயந்திரத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீட்பு பணியானது நீண்டு கொண்டே சென்றதால் அவர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வழியாக 3 மணி நேரத்திற்கு மேல் நடந்த மீட்பு பணியில் முதலில் 14 பேர் மீட்கப்பட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 36 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.