பல்லாவரம் அருகே பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில், தாம்பரம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரம்பலூரைச் சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் சாமிக்கண்ணு ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பூமிக்கு அடியில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கடப்பாரை பட்டதில் சாமிக்கண்ணு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், சாமிக்கண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்காமல் அலட்சியமாக செயல்பட்டதே ஒப்பந்த பணியாளரின் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.