வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர் முரளி ராஜா, சுதர்சன் ஆகியோர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், வழக்கு விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் தனித் தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய காவலர் முரளி ராஜா, சுதர்சன் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கில் தொடர்புடைய முத்துகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அற்புதவாணன் உத்தரவிட்டார்.