சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு என மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நடனக்கலைஞர்களை ஆடவைத்து ரசித்துக் கொண்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. கேள்விக்கான பதில்களை முன்கூட்டியே தயாரிப்பதும், விழிப்புணர்வு வீடியோ எனும் பெயரில் செய்யும் விளம்பரமும், நெட்டிசன்களுக்கும், ட்ரோல் மாஸ்டர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பால் விலையில் தொடங்கி மின்சாரக் கட்டணம் வரை வரிகளும் கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்திருப்பதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் மூலம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதளபாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடன்சுமையைக் குறைப்போம் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மேம்படுத்தவோ, கடன்சுமையைக் குறைக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, அதற்கு நேர் மாறாக நாள்தோறும் பல கோடி ரூபாயை விளம்பரத்திற்காக மட்டுமே செலவிட்டு வருவதாக விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது.
அண்மையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் அங்கு வந்திருந்தார். வழக்கமாகத் தொகுதிக்கு வரும் முதலமைச்சருக்குப் புத்தகமும், பூங்கொத்தும் வழங்கி கவுரவிக்கும் அமைச்சர் சேகர்பாபு, இம்முறை ஆடலும் பாடலும் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியதற்காக முதலமைச்சரைப் பொதுமக்கள் பாராட்டுவதாகக் கூறி அந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல ஆயிரங்களைக் கொடுத்து கை தேர்ந்த நடனக் கலைஞர்களை வரவழைத்து பலமுறை ஒத்திகை பார்த்து நடத்தப்பட்ட இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியைப் பொதுமக்களே தாமாக முன்வந்து நடனமாடியதை போல முதலமைச்சர் கை தட்டி உற்சாகத்துடன் கண்டு ரசித்தார். இந்த நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைச்சர் சேகர்பாபுவோ, தனக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல முதலமைச்சரின் அருகே நின்று நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முதலமைச்சரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடன நிகழ்ச்சி கண்டண்ட் பஞ்சத்தில் தவித்து வந்த மீம் கிரியேட்டர்ஸ்களுக்கும், ட்ரோல் மாஸ்டர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. எருக்கச் செடியோரம் இருக்கிப் பிடிச்ச ஏன் மாமா பாடல், மலையனூர் நாட்டாமை மனச காட்டு பூட்டாம என தங்களுக்கு தோன்றிய அனைத்தையும் போட்டு கலாயக்கத் தொடங்கியுள்ளனர் நெட்டிசன்களும், மீம் கிரியேட்டர்களும்.
முதலமைச்சர் நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுவது இது முதன்முறை அல்ல. உதகையில் மலர்க்கண்காட்சியை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்ட போதும் சரி, எழுதிக் கொடுக்கும் கேள்விகளோடு முன்கூட்டியே வழங்கப்படும் பதில்களையும் பேப்பரில் எழுதி வைத்து பார்த்து படிக்கும் போதும் முதலமைச்சர் ட்ரோல் செய்யப்படுகிறார். அதிலும் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடிய வகைப் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க தவறிவிட்டு, போதையின் பாதையில் செல்லாதீர்கள் என வீடியோ வெளியிட்டது ட்ரோலின் உச்சக்கட்டமாகவே பார்க்கப்பட்டது.
தன்னைச் சுற்றி மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே என்ன நடக்கிறது என்பது முதலமைச்சருக்குத் தெரிவதில்லை என்பது தான் ஸ்டாலின் மீது பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வைக்கும் பிரதான விமர்சனமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மைக்கால செயல்பாடுகளும் ட்ரோல் செய்வதற்கு உகந்த கண்டண்ட்களாகவே அமைந்திருப்பதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
மாநிலத்தின் முதன்மைப் பொறுப்பில் உள்ள முதலமைச்சர், மக்கள் நலத்திட்டங்களில் செலுத்த வேண்டிய கவனத்தை ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கும், விழிப்புணர்வு வீடியோக்கள் எனும் பெயரில் விளம்பரத்திற்கும் நேரத்தைச் செலவிடுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.