அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அதிருப்தி தெரிவித்து 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்தன.
15வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பயிற்சி மையத்தில் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் கையெழுத்தானது. தொமுச, ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்ட நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு அதிருப்தி தெரிவித்து சிஐடியு, ஏஐடியுசி, அதொபே உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்தன.
மேலும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர் விரோதப்போக்குடன் ஒப்பந்தத்தை இறுதி செய்த அமைச்சர் சிவசங்கரை கண்டித்து பாரத் மஸ்தூர் யூனியன் மற்றும் சிஐடியூ நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.