தமிழகத்தில் குற்றச்செயலில் ஈடுபடும் உண்மைக்குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர் எனவும் மாற்று நபர்கள் கைது செய்யப்படுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கொலை,கொள்ளை, பாலியல் குற்றங்கள் சாதாரண ஒன்றாக ஆகிவிட்டது எனவும் அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எளிதாகத் தப்பித்துவிடுகின்றனர் எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்குகளை விரைவில் முடிக்கும் நோக்கில் குற்றம் புரியாத மாற்று நபர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவம் கொடூரத்தின் உச்சம் எனவும் இபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
மேலும், திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டிக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி
உண்மை குற்றவாளிகளை மறைத்து மாற்று நபர்களை காவல்துறை கைது செய்துள்ள விவரங்கள் அடுத்து வர இருக்கும் அதிமுக ஆட்சியில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக ஆட்சிக்கு அடிபணிந்து தவறு செய்பவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கையின் வாயிலாக எச்சரித்துள்ளார்.