இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்ராஜா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹெச்ராஜா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்தநாள் காணும் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அன்பு சகோதரர் அண்ணாமலைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அவர் நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும், நீடூழி வாழ்ந்து தேசப்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அன்புத்தம்பி .அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் துடிப்புடன் மக்கள் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள பதிவில், தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினரும் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணாமலைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறைவில்லா உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி செய்திட இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொது வாழ்வில் அர்ப்பணிப்புடன் மக்களுக்காக களத்தில் இறங்கி அயராது போராடிவரும் தங்களின் சிறப்பான கட்சி பணி, தேச பணி தொடரவும், நீண்ட ஆயுளோடும், பூரண ஆரோக்கியத்தோடும் பல்லாண்டு சீரும், சிறப்புமாக வாழ்ந்திடவும் இந்த இனிய நன்னாளில் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நெஞ்சுரத்தோடு எதையும் எதிர்கொள்ளும் திறன் படைத்த அண்ணாமலை அவர்கள் பூரண உடல் நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.