வத்தலக்குண்டு அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பக் கொண்டு செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாயை, கத்தியைக் காட்டி மிரட்டி 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக நாக அர்ஜுன் என்பவர், 29 லட்ச ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகன எண்ணை வைத்து காவல்துறை விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவருடையது என்பதும், பணத்தைப் பறிகொடுத்தவரான நாக அர்ஜுனும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, கொள்ளை சம்பவத்திற்கும், நாகஅர்ஜுனுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















