மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை அம்மா திடலில், நாளை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 16ம் தேதி மாதிரி கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்கு அவர் அருளாசி வழங்கினார்.
முருக பக்தர்களின் மாநாட்டு திடலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சி சார்பில் மாநாட்டு திடலில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த பக்தர்கள், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.