கன்னியாகுமரி அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவர் தனது இறுதிச் சடங்கிற்கான பணத்தைச் சேர்த்து வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருமனை அடுத்த பாறைக்குளம் பகுதியில் ஆதரவற்றோர் ஆசிரமம் உள்ளது. சமீபகாலமாக அங்கு யாரும் இல்லாததால் ஆசிரமம் பூட்டப்பட்டிருந்தது.
இதனிடையே கேரளாவைச் சேர்ந்த தியாகராஜன் என்ற முதியவர், தனது மகன்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு ஆதரவு இல்லாமல் அப்பகுதியில் சுற்றித் திரிந்தார்.
அவரது நிலைமையை அறிந்த கோபி என்பவர் ஆசிரம நிர்வாகியிடம் பேசி தியாகராஜன் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.
இதையடுத்து தனியாக அங்குத் தங்கியிருந்த தியாகராஜன், பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பாட்டில்களை விற்பனை செய்து அந்த பணத்தில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் தனிமை காரணமாக விரக்தியிலிருந்த அவர், மதுவில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக் கொண்டார். தற்கொலைக்கு முன்பு தனக்கு உதவிய கோபி, ஆசிரம நிர்வாகி மற்றும் உணவு வழங்கிய பரோட்டா கடைக்கார் ஆகிய மூவருக்கும் நன்றி தெரிவித்து தனித்தனியாகக் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அத்துடன், தான் சேர்த்து வைத்த பணத்தைத் தனது இறுதிச் சடங்கிற்கும் கோபி உட்பட மூவருக்கும் சமமாகப் பிரித்து வைத்துள்ளார்.