ரயில்வேதுறை அறிவித்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம், பயணிகள் ரயில் சேவைகளின் அடிப்படை கட்டணத்தை சீராய்வு செய்து திருத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் கிலோமீட்டருக்கு 1 பைசாவும், ஏசி ரயிலில் கிலோமீட்டருக்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு அரை பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிலோமீட்டர் வரையிலான இரண்டாம் வகுப்பு பயணத்திற்கான கட்டணம் உயா்த்தப்படவில்லை.
500 முதல் ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 ரூபாயும்,
ஆயிரத்து 501 முதல் இரண்டாயிரத்து 500 கிலோமீட்டர் தூரத்திற்கு 10 ரூபாயும்,
இரண்டாயிரத்து 501 முதல் மூன்றாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி புறநகர் ரயில் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணம் உயா்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு நடைமுறையும் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரும் 15ஆம் தேதி முதல், அனைத்து டிக்கெட்டுகளுக்கும் இரண்டு காரணி அங்கீகாரம் அவசியம் என்றும், இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு இன்று முதல் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்கத் தவறினால், ஏற்கனவே உள்ள பான் எண் செயலிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.