குற்ற வழக்குகளை முடித்து வைக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் மற்றும் ஏட்டு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை அண்ணாநகர் நடுவன்கரை பகுதியைச் சேர்ந்த அபினேஷ்பாபு என்பவர் மீது, சொத்து பிரச்னையில் கடந்த 2008ஆம் ஆண்டு 2 குற்ற வழக்குகள் , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டன.
இந்த குற்ற வழக்குகளை சிவில் வழக்காக முடித்து விடுவதாகக்கூறி அப்போதைய மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளரான ரஷ்கின் என்பவர், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அபினேஷ் பாபுவிடம் லஞ்சப் பணத்தை வாங்க முயன்றபோது ரஷ்கின், ஏட்டு மோகன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா, ஆய்வாளர் ரஷ்கின், ஏட்டு மோகன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.