திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ஊர்காவல் படை வீரர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமாரானந்தபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் தமிழரசன் என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பாலமுருகனை தனது நண்பர்களான சுமன், நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோருடன் இணைந்து வெட்டி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கேரளாவில் பதுங்கி இருந்த இந்திய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவரான சுமன் என்பவரை தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
தற்போது கொலையில் தொடர்புடைய நரசிம்ம பிரவீன், அஷ்வின் பாரதி, ராமலிங்கம் ஆகிய மூவரை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர். இவர்களில் ராமலிங்கம் என்பவர் முன்னாள் ஊர்காவல் படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.