குரும்பபாளையம் பகுதியில் நள்ளிரவு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் கோவை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபாளையம் வையாபுரி நகரில் கடந்த 2 நாட்களாக மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
மேலும், சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோவை மாவட்ட போலீசார், குரும்பபாளையம் பகுதியில் நள்ளிரவு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் எனத் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த குற்றவாளி கோவையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் நள்ளிரவில் வையாபுரி நகரில் ராமநாதபுரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டதாகவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கோவை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.