காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணையின்போது காவலர்கள் தாக்கியதில் பலியான அஜித்குமாரின் வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த நீதிபதிகள், அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் உள்ளதாக அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
அஜித்குமாரின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை என்ற அளவில் போலீசார் தாக்கியுள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல் சிறப்புப் படை எப்படி வழக்கை கையில் எடுத்தது என சரமாரி கேள்வி எழுப்பினர்.
போலீஸ் என்ற அதிகாரம் தான் இளைஞரை இந்த அளவுக்கு கொடூரமாக தாக்கச் செய்திருக்கிறது என குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், அஜித்குமாரின் மரணம் போலீசார் கூட்டாக சேர்ந்து செய்தது போல் தெரிவதாக கூறினர்.
இளைஞரின் மரணத்திற்கு காரணமான அனைத்து அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என உறுதிபட தெரிவித்த நீதிபதிகள்,
ஒரு மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்திருப்பதாக வேதனை தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.