திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கை காலை நேரத்தில் நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குடமுழுக்கு நேரத்தை விதாயகர் குறிக்காமல் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு நேரத்தை குறிப்பது ஏற்புடையதல்ல என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
சாஸ்திரத்தின் படி நண்பகல் நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதால், வரும் 7-ம் தேதி கோயில் விதாயகரால் பரிந்துரைக்கப்பட்ட நண்பகல் 12.05 மணி முதல் 12.45 மணிக்குள் குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் நண்பகலில் குடமுழுக்கு நடத்தினால் அமைச்சர் கலந்துகொள்ள முடியாது என்பதால் காலையில் குடமுழுக்கு நடத்தப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அப்போது விதாயகர் குறித்து கொடுத்த மூன்று நேரங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து நிபுணர்கள் கருத்தை கேட்ட பின்பே குடமுழுக்கு நடத்தப்படுவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஏற்கனவே குறிக்கப்பட்டுள்ள நேரத்தில் குடமுழுக்கை நடத்தலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.