பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
க்வாட் கூட்டமைப்பின் உச்சிமாநாடு நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கா், அமெரிக்காவின் மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலியாவின் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டகேஷி இவயா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் நிறைவில் க்வாட் கூட்டமைப்புத் தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள், திட்டம் தீட்டியவர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்குச் சர்வதேச ஒத்துழைப்பு தேவை எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு, ஐநா உறுப்பு நாடுகள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.