தமிழகத்தில் அமலுக்கு வந்திருக்கும் மின்கட்டண உயர்வு தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையோடு அதனைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் பெரிய கடைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் 3.16 சதவிகிதம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தொழில்துறையினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக அடுத்தடுத்து பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் ஏற்கனவே ஏராளமான சிறு,குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது மேலும் கட்டணத்தை உயர்த்தியிருப்பது தொழில்துறையையே ஒட்டுமொத்தமாக முடக்கும் செயல் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்கட்டணம் உயர்ந்து கொண்டே செல்வதை ஈடுகட்டும் வகையில் சோலார் பேனல்களை அமைத்தால் அதற்கும் நெட்வோர்க் கட்டணம் வசூலிப்பதாகவும் திமுக அரசு மீது தொழில்முனைவோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மின்கட்டண உயர்வால் மூடப்படும் அபாயத்தில் உள்ள சிறு,குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
அண்டை மாநிலங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துவரும் நிலையில் தமிழக அரசோ அதற்கு நேர்மாறாக தொழில்முனைவோர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் முதலமைச்சர் உள்ளூர் முதலீடுகளைத் தக்க வைக்க போதுமான கவனத்தைச் செலுத்த வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.