அதிமுக ஆட்சிக்காலத்தின் போது சிறு பிரச்சனை என்றாலும் பொங்கி எழும் புரட்சி நடிகர்கள், தற்போது அஜித்குமாரின் படுகொலைக்கு மவுனம் காப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதலமைச்சரே தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்ட நிலையிலும், அமைதி காக்கும் திமுகவின் விசுவாசமிக்க புரட்சி நடிகர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரங்கேறியிருக்கும் கோயில் காவலாளி அஜித்குமாரின் காவல் மரணம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைமுதல், கால் விரல் வரை அஜித்குமாரின் உடலில் இருந்த 40க்கும் அதிகமான காயங்கள், அவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துவிட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவிக்கும் அளவிற்கு அஜித்குமார் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டும், காரணமான காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக – பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
வழக்கமாகவே தமிழகத்தில் ஒரு குற்றச்சம்பவம் நிகழ்கிறது என்றால் பொங்கி எழும் திரை பிரபலங்கள் இம்முறை மவுனமாகக் கடந்து செல்வதாக விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது நடைபெற்ற சாத்தான்குளம் தந்தை- மகன் காவல் மரணத்தின் போது திரைபிலங்கள் ஒன்று திரண்டு வெகுண்டெழுந்து தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன் தொடங்கி நடிகர்கள் சூர்யா, விஷால், விஜய்சேதுபதி, ரவிமோகன், ஜி.வி,பிரகாஷ், சத்தியராஜ், சித்தார்த், ஜோதிகா என ஆட்சிக்கு எதிராகப் பொங்கி எழுந்த பலரும் தற்போது மவுனம் காப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சி என்றால் சிறு பிரச்சனைகளாக இருந்தாலும் வெகுண்டெழுந்து கருத்துச் சொல்வதும், திமுக ஆட்சியாக இருந்தால் மரணம் என்றாலுமே அமைதியாகக் கடந்து செல்வதையுமே வாடிக்கையாக வைத்திருக்கும் ஒரு சில புரட்சி நடிகர்களின் உண்மை முகம் வெளிவந்துவிட்டதாக நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.
அஜித்குமாருக்கு நடைபெற்றிருக்கும் கொடுமை அவரின் உடற்கூராய்வு அறிக்கை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் திமுக அரசுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றி பல்வேறு விதமான காட்டமான கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.
வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற வலியுறுத்தலைக் கண்டுகொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலின், நீதிமன்ற நீதிபதிகளின் கேள்வியைக் கண்டு ஆடிப்போய் தாமாகவே முன்வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.
தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் மீது இருக்கும் தவறை இரு நாட்களுக்குப் பின்னர் உணர்ந்த முதலமைச்சர், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் தொலைப்பேசி மூலமாகப் பேசி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
மாநிலத்தின் முதலமைச்சரே நடந்த தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டபின்பும் கூட புரட்சி நடிகர்கள் வாய்திறக்காமல் இருப்பது திமுக மீதான விசுவாசத்தை வெளிப்படுத்துவதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கருத்துச் சொல்வதற்குத் திரைப்பட நடிகர்கள் உட்பட அனைவருக்கும் உண்டு என்றாலும், அது எந்த ஆட்சியாக இருந்தாலும் தொடர வேண்டும் என்பதே பொதுமக்கள் வைக்கும் விமர்சனமாக உள்ளது.