தாம்பரம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட சம்பவத்தில் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் கடந்த 28-ம் தேதி, உடலில் காயங்களுடன் உயிரற்ற நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை சேலையூர் போலீசார் மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
குறிப்பாக சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உடலை வீசிச் சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சரவணன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது உயிரிழந்த நபர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் என்பதும், பெண் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சரவணன் உள்ளிட்டோர் ஜெயகுமாரை மது அருந்தவைத்து தாக்கியதும் அம்பலமானது.
தாக்குதலில் ஜெயகுமார் உயிரிழந்தது தெரியாமல் அவரை சாலையோரம் வீசிச் சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விக்னேஷ் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.