திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயிலின் மேல் தளத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 7ஆம் தேதி குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கடந்த 1ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கிய நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை காண்பதற்காக கோயிலின் மேல் தளத்தில் சுமார் 40 ஆயிரம் சதுரஅடி பரப்பில் பிரம்மாண்டமான மேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயிலின் மேல் தளத்தில் அமைக்கப்படும் ஒரு மேடையில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என 600 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகம் மட்டுமின்றி வெளிப் பகுதிகளிலும் 40 பெரிய அகன்ற எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாவை முழுமையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.