திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ஊக்க மருந்து பயன்படுத்திய பாடி பில்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீஞ்சூரை சேர்ந்த 42 வயதான மணிகண்டன் என்பவர் கடுமையான உடற்பயிற்சி செய்து இந்திய அளவில் ஆணழகன் என்ற பட்டத்தைப் பெற்றார்.
மணிகண்டன் இறுதியாக 10 ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவிலான போட்டிக்குச் சென்றதாகவும், அதில் முதலில் எடை பார்க்கும் பொழுது சக நண்பர் ஒருவர் ஊக்க மருந்தை அதிக அளவில் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய மணிகண்டன், அதில் கலந்து கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தனது நண்பர் சிலரின் தூண்டுதலில் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் ஊக்க மருந்தை உட்கொண்டதாக அவரது சகோதரியும் தாயாரும் தெரிவிக்கின்றனர். ஊக்க மருந்து உட்கொண்டதால் மணிகண்டன், லோ சுகர் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மணிகண்டனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.