இந்து முன்னணி அலுவலகம் மீதான வெடிகுண்டு வீச்சு, அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பைப் குண்டு வைத்த வழக்கு உள்ளிட்டவற்றில் 30 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
2012 -13 காலக்கட்டத்தில் மதுரையில் பால் வியாபாரி சுரேஷ், ராமநாதபுரத்தில் பூசாரி முருகன், வேலுாரில் பாஜக மருத்துவ பிரிவு செயலாளர் அரவிந்த் ரெட்டி, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்குகளை சிபிசிஐடி பிரிவின் எஸ்ஐடி எனப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் அல் உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத கும்பலின் தளபதியாகச் செயல்பட்டு வந்த நாகையை சேர்ந்த அபுபக்கர் சித்திக், நெல்லையைச் சேர்ந்த முகமது அலி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் ஆந்திராவில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திராவின் அன்னமையா பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.