ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ (Fraud) என்று SBI வங்கி தீர்மானித்துள்ளது. அதன் முன்னாள் இயக்குநரான அனில் அம்பானிக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கியிடம் புதிய விதிமுறைகளுக்கேற்ப புகார் அளிக்கப்போவதாகவும் SBI தெரிவித்துள்ளது. உலகின் 6வது பணக்காரர் என்ற உயரத்திலிருந்து FRAUD என்ற நிலைக்கு அனில் அம்பானி வந்ததற்கு என்ன காரணம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சர்வதேச அளவில், மிகப் பெரிய தொழில் குழுமமாக விளங்கி வருகிறது ரிலையன்ஸ் குழுமம். திருபாய் அம்பானி, சிறியதாக தொடங்கிய ரிலையன்ஸ் இன்றைக்கு பல்வேறு தொழில் துறைகளிலும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவரும் ரிலையன்ஸ் குழும தொழில்களைத் தனித்தனியே நிர்வகிக்கத் தொடங்கினர்.
ஆரம்பத்தில் லாபகரமாக இயங்கிவந்த அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. 2011 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், 2018 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் 2024 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் பவர் ஆகிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தன.
2011 ஆம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த துர்சர் சோலார் பவர் பிரைவேட் லிமிடெட் உடனான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையின் காரணமாக, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் திவால் உத்தரவுக்கு உள்ளானது. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதேபோல், 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கு இடையில் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்தியப் பங்குச் சந்தை வாரியமான செபி விசாரணை நடத்தியது. விசாரணையில் அனில் அம்பானிக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. கூடுதலாக 25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் பவர் சூரிய திட்ட ஏலங்களில் பங்கேற்க அனுமதி அளித்த குற்றச்சாட்டில், கடந்த மே மாதம், இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனின் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏலங்களில் பங்கேற்க அனில் அம்பானியின் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால்,டெல்லி உயர் நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டது.
தனிப்பட்ட முறையில், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டிலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வகையில் அனில் அம்பானி ஐந்து ஆண்டுகளுக்கு பத்திரச் சந்தையில் நுழைவதற்கு செபியால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அனில் அம்பானி பத்திரங்களில் வர்த்தகம் செய்வதையும் பங்குச் சந்தையுடன் தொடர்பில் இருப்பதையும் தடை செய்துள்ளது.
இந்நிலையில் தான், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை மோசடி என்று SBI வங்கி தீர்மானித்துள்ளது. தங்கள் வங்கியில் 31,580 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குப் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனம் வழங்கிய பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
கடன் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்கான காரணத்தைச் சரியாக விளக்கவில்லை என்றும் கணக்கு குறித்த சந்தேகங்களுக்கு, முழுமையான பதில்களைக் கொடுக்கவில்லை என்றும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. கடன் விதிமுறைகளை மீறியுள்ளதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மோசடி அடையாளக் குழு கண்டறிந்ததைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கு ‘மோசடி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பெயரும், அதன் முன்னாள் இயக்குநரான அனில் அம்பானியின் பெயரும், இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கெனவே, 2019ம் ஆண்டு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து, திவால் தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீர்வு நடவடிக்கைகளுக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
திவால் நடைமுறை தொடங்குவதற்கு முன்பு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வாங்கிய கடன் கணக்கைத் தான் SBI வங்கி மோசடி கணக்கில் வைத்துள்ளது. ஏற்கெனவே, 2020ம் ஆண்டில் அனில் அம்பானி பிரிட்டன் நீதிமன்றத்தில் தனிப்பட்ட திவால் நிலையை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.