கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவனட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவரது 13 வயது மகன் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொருவருடன் சேர்ந்து புதன்கிழமையன்று சிறுவனை காரில் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அஞ்செட்டி காட்டுப்பகுதியில் சிறுவனின் உடல் வீசப்பட்டதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காட்டுப்பகுதிக்குச் சென்று சிறுவனின் உடலைத் தேடினர்.
அப்போது கொலை செய்யப்பட்டுக் கிடந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அஞ்செட்டி போலீசார், சிறுவனைக் கடத்தி கொன்றது தொடர்பாகச் சிலரைப் பிடித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.