அமெரிக்கா ஆயுத சப்ளையை நிறுத்தியதால், ரஷ்யாவின் அதிரடி தாக்குதலுக்கு உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறி வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டில் நேட்டோவில் இணைய விரும்பிய உக்ரைன் மீது, ரஷ்யா போரைத் தொடங்கியது. இதையடுத்து அமெரிக்க அரசு உக்ரைனுக்குப் பல ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களையும், ராணுவ உதவியையும் வழங்கி வந்தது.
இதனிடையே சமீபத்தில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனிலேயே சில குறிப்பிட்ட ஆயுதங்களின் இருப்பு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உக்ரைனுக்கு அனுப்பி வந்த சில குறிப்பிட்ட ஆயுதங்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி 477 டிரோன்கள், 60-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதால் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
அமெரிக்காவின் முடிவால் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்குத் தேவையான ஏவுகணைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வருகிறதா? எனவும் கேள்வி எழுந்துள்ளது.