இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் பலமணி நேரமாக விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், விசாரணையின்போது தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார்.
இந்த வழக்கை மதுரை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணையை தொடங்கினார்.
இந்த நிலையில், இளைஞர் மரண வழக்கு தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணை நடத்தினார். போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், கோயில் அலுவலர் பிரபு, கார்த்திக்ராஜா ஆகியோரிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து திருப்புவனம் ADSP சுகுமாறன், ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன் மற்றும் உறவினர்கள் இருவர் வழக்கு தொடர்பாக நீதிபதியிடம் சாட்சியம் அளித்தனர். அவர்களிடமும் சுமார் இரண்டரை மணி நேரமாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை மேற்கொண்டார்.