திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தப்பட்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கடந்த 1ஆம் தேதி கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் யாக சாலை பூஜை தொடங்கப்பட்ட நிலையில், யாகசாலையில் விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, கோயிலின் மூலவர் உள்ள விமானத்தில் தங்கக்கலசம் பொருத்தும் பணி நடைபெற்றது. தங்க கலசத்தில் புதுப்பிக்கப்பட்ட செப்பு பட்டயம், வரகு, குடமுழுக்கு விழா அழைப்பிதழ், இலை விபூதி வைத்து பூஜை செய்யப்பட்ட நிலையில், மூலவர் விமானத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.