கள்ளக்குறிச்சி கச்சிராபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த விஜய் அதிக சம்பளம் பெற்று தருவதாகக் கூறி துபாய்க்கு வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து மோசமான உடல்நிலையுடன் வீடு திரும்பிய ஜெயபால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு பின் உயிரிழந்ததாக தெரிகிறது.
இது தொடர்பான புகாரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், அவரது மனைவி FIR பதிவு செய்ய நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றுள்ளார். FIR பதிவு செய்தும் மேல்நடவடிக்கை எடுக்கப்படாததால், அதுகுறித்து விசாரிக்க ஜெயபாலின் அண்ணன் மகன் விக்கி கடந்த மாதம் கச்சிராபாளையம் காவல் நிலையம் சென்றுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த போலீசார் விக்கியை காவல் நிலையத்திற்குள் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்ற காவலரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற காவலர்கள் குறித்து விசாரிக்க மாவட்ட டிஎஸ்பி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.