தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வலம் வரும் சத்யன், தன் திரையுலக பயணத்திற்காகப் பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சத்யனின் தந்தைக்கு சினிமா மீதிருந்த ஆர்வமே சத்யனின் இந்த நிலைக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் தனித்துவமிக்க நடிப்பின் மூலம் திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தை தக்கவைத்திருப்பவர் தான் இந்த சத்யன்.
ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜயுடன் இணைந்து நண்பன் மற்றும் துப்பாக்கி படங்களில் சத்யன் நடித்த கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும் நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்த நவீன சரஸ்வதி சபதம் சத்தியனுக்குச் சிறந்த குணச்சித்திர நடிகர் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது.
நகைச்சுவை நடிகராக அறியப்பட்டு வரும் சத்யன் பிறப்பிலேயே ஒரு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கோவை மாவட்டம் மாதம்பட்டி ஜமீன்தாராக இருந்த மாதம்பட்டி சிவக்குமாரின் ஒரே மகன் தான் இந்த சத்யன்.
பல நூறு ஏக்கர் பரப்பளவில் தோப்புகள், கணக்கில் அடங்காத சொத்துகள், பல ஏக்கர் பரப்பளவிலான பங்களா என கோடிக்கணக்கிலான சொத்துக்கு ஒரே வாரிசாக இருந்த சத்யனின் நிலை இன்று தலைகீழாக மாறியிருக்கிறது.
சத்யனின் தந்தை மாதம்பட்டி சிவக்குமாருக்கு இருந்த சினிமா மீதான ஆர்வமே அனைத்து சொத்துக்களையும் இழந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சத்யனின் தந்தை மாதம்பட்டி சிவக்குமார் ஜமீன்தாராக இருந்தாலும் சினிமா மீது அதிக ஆர்வத்துடன் இருந்துள்ளார். தமிழ் நடிகர்களான சிவக்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோர்கள் கூட மாதம்பட்டி சிவக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் தான்.
சத்யராஜ் ஆரம்பக் காலத்தில் திரைத்துறைக்கு வரும் போது குடும்பத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மாதம்பட்டி சிவக்குமார் தான் அவருக்கு ஆதரவாக நின்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் திரைப்படம் தயாரிப்பு வேளையில் இறங்கிய மாதம்பட்டி சிவக்குமாருக்கு அடுத்தடுத்து சரிவு ஏற்படத் தொடங்கியது. தன்னுடைய சொத்துகளை ஒவ்வொன்றாக விற்கத் தொடங்கிய மாதம்பட்டி சிவக்குமார், ஒரு கட்டத்தில் தனது சொந்த மகனான சத்யனை சினிமாவில் அறிமுகப்படுத்த எண்ணினார்.
சத்யனை ஹீரோவாக வைத்து இளையவன் மற்றும் கண்ணா உன்னைத் தேடுகிறேன் ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்தார் சிவக்குமார். இரண்டு படங்களுமே போதிய வரவேற்பின்றி தோல்வியைத் தழுவியதால் நிதி இழப்பு மேலும் அதிகமாகியது.
தொடர் தோல்வியால் ஹீரோ அந்தஸ்தில் இருந்து சற்று கீழ் இறங்கி வந்த சத்யன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
70க்கும் அதிகமான படங்களில் நடித்து தற்போது சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சத்யன் வலம் வருகிறார். திரைத்துரையில் தான் நினைத்த வளர்ச்சியை அடைய முடியவில்லை என்றாலும் ஓரளவுக்கு வளர்ச்சியை சத்யன் அடைந்துள்ளார்.
ஆனால் மாதம்பட்டி சிவக்குமாரின் நடவடிக்கையால் பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஜமின் தார் வீட்டுப்பிள்ளை என்ற பெயர் மட்டுமே சத்யனிடம் மீதமிருக்கிறது.
ராஜவாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தின் ஒரே வாரிசான சத்யன், தனக்கென கோவை மாதம்பட்டியில் இருந்த ஒரே ஒரு பங்களாவையும் தற்போது விற்றுவிட்டு சென்னையில் செட்டில் ஆகியுள்ளார்.
அதோடு குட்டிராஜா என அன்போடு அழைக்கப்பட்ட மாதம்பட்டி ஊருக்குச் செல்வதையே சத்யன் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. சினிமா மீதிருந்த மோகம் ஜமீன்தார் குடும்பத்தை எதுவுமே இல்லாத குடும்பமாக மாற்றியிருப்பது திரையுலகத்தினர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.