திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜையில், திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களில் புதன் பகவானும், சிவபெருமானின் 64 மூர்த்தி வேதங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியும், ஆதி சிதம்பரம் என போற்றப்படும் நடராஜர் சபையும் தனித்தனியே அமைந்துள்ளது.
இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலின் கும்பாபிஷேக விழா ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த 30ஆம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது.
இந்நிலையில், 4ஆம் கால யாகசாலை பூஜையில் பங்கேற்க வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் ஆகியோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இருவரும் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது, யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், ஆதீனங்களிடம் அருளாசி பெற்றுச் சென்றனர்.