விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போர்மெனை போலீசார் கைது செய்தனர்.
கீழதாயில்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
இந்த நிலையில், பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தால் பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டது. இதனையறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த வெடி விபத்தில், சம்பவ இடத்திலேயே உடல்சிதறி ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்து தொடர்பாக, போர்மேன் லோகநாதானை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.