அலங்காநல்லூர் அருகே 2 மாதங்களுக்கு முன்பு 2 சகோதரர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தாக்கிய வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் இருந்து அவரது மருமகன் ஆண்டிச்சாமி, தனது மகனின் திருமணத்திற்காக 3 சவரன் நகையை வாங்கி அடகு வைத்துள்ளார். பின்னர், அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, வாங்கிய நகையை திருப்பி கொடுக்க ஆண்டிசாமி மறுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நகையை திருப்பி தருமாறு ஆண்டிசாமியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது, கால அவகாசம் கேட்டு காவல் நிலையத்தில் எழுதி கொடுத்த ஆண்டிசாமி, நகையை திருப்பி தர தாமதப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 24ஆம் தேதி வெள்ளையம்மாள் மீண்டும் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். அப்போது, ஆண்டிசாமியை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது மகன்கள் யுவராஜ், தர்மராஜ் ஆகியோரை போலீசார் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.