திருப்புவனம் லாக் -அப் மரணத்தில் சம்மந்தப்பட்ட நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிகிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், நிகிதா மீது ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், சம்பவத்தன்று காரில் வந்திறங்கிய நிகிதா, கார் சாவியை அஜித்திடம் கொடுத்து பார்க் செய்ய கூறியதாகவும், அஜித்துக்கு கார் ஓட்ட தெரியாததால் தன்னிடம் காரை பார்க் செய்யுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அஜித் காரில் அமர்ந்தவுடன், தான் காரை பார்க் செய்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அதன்பிறகு நிகிதா நகை திருட்டு புகாரளித்ததாக மனுவில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து விசாரணைக்காக தன்னையும் அஜித்தையும் காவலர்கள் அழைத்து அடித்ததாக கூறியுள்ள அருண்குமார், நிகிதா மீது ஏற்கனவே பல மோசடி புகார்கள் இருப்பதால் அவரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
திருப்புவனம் விவகாரத்தில் நிகிதா மீது மேலும் ஒருவர் புகாரளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.