விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே கீழதாயில்பட்டியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறிய நிலையில், 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிர்வுகள் உணரப்பட்டன.
தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். அறைகள் தரைமட்டமானதில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 4 பேருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களான கணேசன், காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், போர்மேன் லோகநாதனை கைது செய்தனர். இதனிடையே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.