தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக திருப்பூர் தமிழன்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
9-வது TNPL கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸை வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய துஷார் ரஹேஜா 77 ரன்களும், அமித் சாத்விக் 65 ரன்களும் அடித்து விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு திருப்பூர் அணி 220 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, திருப்பூர் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
கேப்டன் அஸ்வின் ஒரு ரன்னிலும், பாபா இந்திரஜித் 9 ரன்களிலும், விமல் குமார் 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் திண்டுக்கல் அணி 14 புள்ளி 4 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.