மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேடு விவகாரம் தொடர்பாக மண்டல தலைவர்கள், வரிவிதிப்பு மற்றும் நகரமைப்பு குழு தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
மதுரை மாநகராட்சியில் சொத்துவரி விதிப்பில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் பணிபுரியும் பில் கலெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், 5 பில் கலெக்டர்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மண்டல தலைவர்கள் மற்றும் வரிவிதிப்பு குழுவினரின் வற்புறுத்தினால் வரி குறைப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையர் அலுவலக அறையில், வரிக்குறைப்பு முறைகேடு தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
2 மணி நேர விசாரணைக்குப் பிறகு மண்டல தலைவர்கள், வரிவிதிப்பு மற்றும் நகரமைப்பு குழு தலைவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அமைச்சர்களிடம் வழங்கினர். மேலும், மதுரை மேயர் இந்திராணியும் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.