கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன்று ஒன்று புறப்பட்டது. செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் சாருமதி என்ற மாணவியும், நிவாஸ் என்ற மாணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்ற மாணவர்களையும், வேன் ஓட்டுநரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செழியன் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் பலியான சாருமதியும், செழியனும் உடன்பிறந்த அக்கா- தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. அப்போது தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் கடலூர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். ரயில் விபத்து காரணமாக மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.