நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் கடந்த 30ஆம் தேதி ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி, அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அதிகாலை கோலாகலமாகத் தொடங்கியது. அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
பின்னர், தேரோட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு, எம்பி ராபர்ட் ப்ரூஸ், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு “ஓம் நமசிவாய” என்று கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நான்கு ரத வீதிகளிலும் இரண்டு உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிரமாகக் கண்காணித்தனர்.
தேரோட்டத்தையொட்டி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், மானூர், ஆலங்குளம், தென்காசி, அம்பை, பாபநாசம் மார்க்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது.