விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்ததாக உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், செம்மண்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ், வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ் கூறுகையில், வழக்கமாகச் செல்லும் பாதையில் சென்றபோது கேட் திறந்துதான் இருந்தது என்றும், சிக்னல் எதுவும் போடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ரயில் வரும் சத்தம் கேட்காததால் ரயில்வே கேட்டை கடந்தபோது பள்ளி வேன் மீது ரயில் மோதியதாகக் கூறினார். விபத்து நிகழ்ந்த பிறகும் கேட் கீப்பர் வரவில்லை என்றும், கேட் கீப்பர் கூறுவது முற்றிலும் தவறு எனவும் மாணவர் விஸ்வேஷ் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வேன் ஓட்டுநர் சங்கர், தாம் சென்றபோது ரயில்வே கேட் திறந்து இருந்ததாகக் கூறினார். கேட் கீப்பரிடம் பேசவே இல்லை எனக்கூறிய அவர், வாகனத்தில் 4 மாணவர்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.
ரயில் சென்றுவிட்டதாக நினைத்து கேட்டை கடந்ததாகவும், அந்த இடத்தில் கேட் கீப்பர் இல்லாததால் வாகனத்தை இயக்கியதாகவும் ஓட்டுநர் சங்கர் தெரிவித்துள்ளார்.